Views of Cho Ramaswamy


 

‘மோடியை முன்னிறுத்தியுள்ளதால், இந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு, 200 சீட்டு களுக்கு மேல் கிடைக்கும். காங்கிரஸ் நான்காவது இடத்துக்கு தள்ளப்படும்’ என, பத்திரிகையாளர் சோ தெரிவித்தார்.

அதிரடி சந்திப்புகள் மூலம், தமிழக அரசியலில் திடீர் திருப்பங்களுக்கு காரணகர்த்தாவாக இருப்பவர் சோ. சமீபத்திய அவரது சந்திப்பு, முதல்வர் ஜெயலலிதாவுடன் நடந்தது.
அது ஏற்படுத்திய விவாதமும், பரபரப்பும் ஓயாத நிலையில், `தினமலர்’ நாளிதழுக்கு நேற்று அவர் அளித்த சிறப்பு பேட்டி:

மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது, பா.ஜ.,வுக்கு சாதகமாக அமையும் என்று கருதுகிறீர்களா?
நிச்சயமாக, 2009ல் இருந்தே நான் இதை வற்புறுத்தி வருகிறேன். பல முறை எழுதியும், பேசியும் இருக்கிறேன். ‘எலக்சன் இஷ்யூ, எலக்சன் இஷ்யூ… என்று சொல்கின்றனர்.மோடி வந்தால், அவர் தான் இஷ்யூ’ என, எழுதினேன்.போலி மதச்சார்பின்மை பற்றி பேசி, ஓட்டு வாங்குவதற்காக, மதச்சார்பற்றவர் என்ற வேஷம் போடுபவர்கள் தான், மோடி வரக்கூடாது என, பிரச்னையை பெரிதாக்குகின்றனர்.ஏன் மோடி வரக் கூடாது என்று இவர்கள் சொல்கின்றனர் என்ற கேள்வி எழும். அது பா.ஜ.,வுக்கு மிகவும் சாதகமாக அமையும். இந்த கருத்தை நான், எங்கள் பத்திரிகையின், இரண்டு ஆண்டு விழாக்களில் பேசியிருக்கிறேன்.

காங்கிரஸ் தரப்பில், அடுத்த தலைமையாக, ராகுலை முன்னிலைப்படுத்துகின்றனர். மோடி – ராகுல் ஒப்பிட்டால் யார் சிறந்தவர்?
ஒப்பிடுவதற்கு விஷயமே இல்லை. நிர்வாகத் திறன், உழைப்பு, ஊழலற்றத்தன்மை, துணிவு, பேச்சுத் திறன் என, பல முகங்களை கொண்ட மோடியுடன், இவற்றில் எதுவுமே இல்லாத ராகுலை எப்படி ஒப்பிடுவது. சம்பந்தமே இல்லாமல், இரண்டு பேரையும் ஒப்பிடுவது போல் ஆகி விடும்.

மோடி பங்கேற்ற திருச்சி மாநாட்டில், கட்டணம் கொடுத்து ஆன்–லைனில் முன்பதிவு செய்து கலந்து கொண்டிருக்கின்றனரே, அது பற்றி?
இந்தளவுக்கு பணம் கொடுத்து, பெரும்பாலான மக்கள் வருகின்றனர் என்பது பெரிய விஷயம். பணம் கொடுத்து, இப்படி பொதுக் கூட்டத்துக்கு வருவதன் மூலம், மக்களுக்கு ஒரு ஈடுபாடு உண்டாகும். பொதுக் கூட்டத்தை விடுங்கள்; நேற்று மும்பை விமான நிலையத்தில், மோடியை வரவேற்க வந்த கூட்டத்தை, ‘டிவி’யில் காட்டினர்; எவ்வளவு கூட்டம்!

திருச்சி கூட்டத்தில் மோடி பேச்சு எடுபடாமல் போய் விட்டதாக, ஒரு தரப்பில் குறை சொல்லப்படுகிறதே?
எனக்கு இந்தி தெரியாது. ஆனால், அவர் பேசிய விதமும், ஆவேசமும், அதற்கான மொழியாக்கமும் அவரது பேச்சில் விஷயம் இருப்பதை காட்டியது.
மத்திய அரசின் குறைகளை அவர் எடுத்துச் சொன்ன விதத்தில், அவரது அனுபவமும் திறமையும் பளிச்சிட்டது.

தமிழக விவகாரங்கள் பற்றி பேசாதது, ஒரு குறை தானே?
வேறு எங்கும் அவர் மாநில அரசியல் பேசியதாக தெரியவில்லையே. டில்லியில் மட்டும், ஷீலா தீட்ஷித் அரசை பற்றி ஓரிரு வார்த்தை பேசிஇருக்கிறார்; அதுவும் பெரிதாக இல்லை.தேசிய பிரச்னைகளில் மட்டுமே அவர் கவனம் செலுத்துகிறார் என, கருதுகிறேன்.

யோசனை சொல்வதில்லை:
சமீபத்தில், முதல்வர் ஜெயலலிதாவை நீங்கள் சந்தித்தீர்கள். மோடியின் தூதராக போய் பார்த்ததாக, வெளியில் பேசப்படுகிறதே?
மோடியின் தூதராக போனதாக, நீங்கள்தான் சொல்கிறீர்கள். நான் யார் தூதரும் அல்ல; யாருக்கும் தூது போகவும் இல்லை. மோடி ஒன்றும் ஜெயலலிதாவிடம் தூது போகும்படி சொல்லவும் இல்லை. முதல்வர் ஜெயலலிதாவும், மோடி பற்றி பேச வேண்டும் என்று, என்னை அழைக்கவும் இல்லை.நானும், முதல்வரும் அடிக்கடி இல்லாவிட்டாலும், அவ்வப்போது சந்திப்பது உண்டு; அதுபோன்ற சந்திப்பு தான் அது.

பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்வது பற்றி ஆலோசனை சொன்னதாக தகவல்…

நீங்கள் நினைப்பது போல், நான் அவர்களுக்கு யோசனை சொல்வது கிடையாது. அவர்களுக்கு அது தேவையும் கிடையாது. அதற்கு, என்னை விட திறமை, அறிவு, அனுபவம் பெற்ற அதிகாரிகள் நிறைய பேர் இருக்கின்றனர்.

மோடி என்றதும், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி நிச்சயம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது அதற்கான வாய்ப்பு இல்லாமல் போய் விட்டதாக பேசப்
படுகிறதே?
யார் எதிர்பார்த்தது; பத்திரிகைகள் தான் எதிர்பார்த்தன. கூட்டணி ஏற்படுவதற்கான சூழ்நிலையே வரவில்லையே. எந்த கட்சியும் கூட்டணி பற்றி இன்னும் தீர்மானம் செய்யவில்லையே. இங்கு மட்டுமல்ல; எந்த மாநிலத்திலும் கூட்டணி முடிவாகவில்லை.ஆனால், இதுபோன்ற யூகங்களை கிளப்பி விடுகின்றனர்.

அப்படியானால், அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணிக்கு, ‘சான்ஸ்’ இருக்கிறதா?
எந்த கட்சியும் கூட்டணி பற்றி முடிவு செய்யாதபோது, இன்னும் அதற்கான சான்ஸ் இருப்பதாகவே கருதுகிறேன்.

தமிழகத்தில், பா.ஜ., தலைமையில் மூன்றாவது அணி அமையலாம் என்ற பேச்சு அடிபடுகிறதே?
அது, அந்த அணி எப்படி அமைகிறது என்பதை பொறுத்தது. மூன்றாவது அணி எப்போதுமே, முதல் அணியாக வந்ததில்லை.

அப்படி அமைந்தால் எப்படி இருக்கும்?
மோடி எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறார்; பா.ஜ.,வுக்கு எந்தளவுக்கு ஆதரவு கிடைக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.நிச்சயம் தேசிய அளவில் மோடிக்கு வரவேற்பு இருக்கிறது. அது தமிழ்நாட்டில் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.சில மாநிலங்களில் மோடிக்கு ஆதரவுஅதிகம் இருக்கலாம்; சிலவற்றில் குறைவாக இருக்கலாம். கூட்டணி சேர்வதற்கு முன், இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தி.மு.க.,எந்தப்பக்கம்?
தி.மு.க.,வும் பா.ஜ., பக்கம் போக வாய்ப்பிருக்கிறதா?
இதுவரை எந்த கூட்டணி என்பதை முடிவு செய்யவில்லை என்று கருணாநிதியும் சொல்லிஇருக்கிறாரே?கருணாநிதி, பா.ஜ., பக்கம் போக மாட்டார் என்றே நம்புகிறேன். பா.ஜ.,வும் அதை விரும்பாது என்று, நினைக்கிறேன். காங்கிரசுடன் போகும் நிலைமையே அவருக்கு ஏற்படும். அதுமட்டுமல்ல; வேறு சில கட்சிகளுடன் கூட்டு சேரும் வாய்ப்பும் கருணாநிதிக்கு இருக்கிறது.

இந்த தேர்தலில் தேசிய அளவில், காங்கிரசுக்கு எந்தளவுக்கு ஆதரவு கிடைக்கும்?
தமிழகத்தில் காங்கிரசுக்கு எந்தளவுக்கு ஆதரவு இருக்கிறதோ, அதே அளவுக்கு தான் தேசிய அளவிலும் கிடைக்கும். இங்கே, நான்காவது இடம் தான் கிடைக்கும். தேசிய அளவிலும், நான்காம் இடத்துக்கு தள்ளப்படலாம். மூன்றாவது இடத்துக்கு அந்த கட்சி முன்னேறினால், அதுவே அக்கட்சிக்கு பெரிய வெற்றியாக இருக்கும்.

அப்படியென்றால், இரண்டாவது இடம் யாருக்கு?
மாநில கட்சிகளுக்கு கிடைக்கலாம்.

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?
டில்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் பா.ஜ., வெற்றி பெறும். டில்லியில் ஆம் ஆத்மி கட்சியினால், ஓரளவுக்கு ஓட்டுகள்
பிரியலாம். பத்திரிகைகள் சொல்வதுபோல், பெரிய சக்தியாக, அந்த கட்சி வராது.

இந்த முடிவுகள், லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்குமா?
நிச்சயமாக எதிரொலிக்கும்

.தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ., ஆட்சியை பிடிக்க, மோடி பிரசாரம் கை கொடுக்குமா?
அதை இப்போது சொல்ல முடியாது. எப்படியும் 200 சீட்டுகளுக்கு மேல் கிடைக்கும்.

Advertisement

ஜெயலலிதா ஆசை:
ஒவ்வொரு தேர்தலிலும், உங்களது, ‘ரோல்’ கண்டிப்பாக இருக்கும். இந்த முறை என்ன, ‘ரோல்’?
ஒவ்வொரு முறையும் என்று சொல்ல முடியாது; சில முறை எனது பங்களிப்பு இருந்திருந்தாலும், இந்த முறை தேறுமா என்பது தெரியவில்லை. கட்சிகளே முனைப்பு காட்டாதபோது, நான் என்ன செய்துவிட முடியும்.

ஜெயலலிதாவுக்கும் பிரதமர் ஆசை இருப்பதாக தெரிகிறதே, அதற்கு வாய்ப்பு வருமா?
பா.ஜ.,- காங்கிரஸ் கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்ற முடியாத நிலை வந்தால், மாநில கட்சிகளின் தயவில் ஆட்சி அமைக்கும் முயற்சி நடக்கும். அப்போது வேண்டுமானால், ஜெயலலிதாவுக்கு வாய்ப்பு வரலாம். என்னை பொறுத்தவரையில், அதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. மேலும், மோடி ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தை பொறுத்து சூழ்நிலை அமையும்.

ஜெயலலிதாவின் பிரதமர் ஆசை நியாயமானதா?
அவருக்கு அந்த ஆசை இருப்பதாக, நீங்கள்தான் சொல்கிறீர்கள். அது, தேர்தல் முடிவுகள் வரும்போது தெரியும். மோடி பிரதமராக வராவிட்டால், அந்த இடத்துக்கு தகுதியானவர் ஜெயலலிதா தான் என்று, எங்கள் பத்திரிகை ஆண்டு விழாவில் நான் பேசியிருக்கிறேன்.

தேசிய அளவில் மூன்றாவது அணி அமைந்து, ஆட்சியை பிடிக்க முடியுமா?
காங்கிரஸ் — பா.ஜ., அல்லாத கட்சிகள் எல்லாம் சேர்ந்து மூன்றாவது அணி அமைத்து விட முடியாது.

மம்தா – மாயாவதி, சந்திரபாபு நாயுடு – ஜெகன் மோகன் ரெட்டி, ஜெயலலிதா – கருணாநிதி ஆகியோரால் எப்படி ஓரணியில் இடம் பெற முடியும்.

காங்கிரஸ் அரசு மீது குவியும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து?
இதுவரை இவ்வளவு பெரிய ஊழல்கள் நடந்தது இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஊழலில் சாதனை படைத்துள்ளனர். ஊழலை மறைக்க முயல்வது மட்டுமல்ல; ஊழல்வாதிகளை காப்பாற்றுவதிலும் கடும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.அதற்காக, சி.பி.ஐ.,- மத்திய தணிக்கை துறையான சி.ஏ.ஜி., போன்ற அமைப்புகளை எல்லாம் பல
வீனப்படுத்தும் நடவடிக்கைகளும் நடக்கின்றன.

குற்ற வழக்கில் தண்டனை பெற்ற எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்களை, பதவி பறிப்பில் இருந்து காப்பாற்ற, மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்து இருக்கிறதே?
சட்ட ரீதியாக அதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. தண்டனை பெற்றவர், அப்பீல் செய்து, அதில் வெற்றி பெற்று விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதற்குள், அவரது பதவியை பறித்து, இடைத்தேர்தல் நடத்தி, வேறு ஒருவர் தேர்வு செய்யப்பட்டு விடுகிறார் என்றால், பதவி பறிப்புக்கு ஆளானவருக்கு எப்படி நியாயம் கிடைக்கும்.எனவே அவசர சட்டமே அனாவசியமானது அல்ல; ஆனால், அது அவசர அவசரமாக கொண்டு வந்தது தான் அனாவசியம்.

`அந்த சட்டத்தை கிழித்தெறிய வேண்டும்’ என, ராகுல் காட்டமாக கூறிஇருக்கிறாரே?
அவர் வேண்டாம் என்று சொன்னதை மீறி, இந்த சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கும் என, நினைக்கிறேன். அந்த கோபத்தில் அவர் பேசிஇருக்கிறார். ஆனால், கட்சியின் துணை தலைவராக இருப்பவர் ஆவேசமாக பேசியிருக்கக் கூடாது.

இலங்கை தமிழர் பிரச்னை, இந்த தேர்தலில் எதிரொலிக்குமா?
இலங்கை தமிழர் பிரச்னையை முன்வைத்து, மக்கள் எப்போதும் ஓட்டு போட்டது இல்லை. அப்படி செய்திருந்தால், வைகோ தான் முதல்வர் பதவியில் இருந்திருக்க வேண்டும்.

எதிர்க்கட்சி தலைவர், விஜயகாந்த் பற்றி…?
எதிர்க்கட்சி தலைவர் என்பது சாதாரண விஷயமல்ல. அதில் இருந்து கொண்டு, அவர் தனது கட்சியை வளர்ப்பதாக தெரியவில்லை.இவ்வாறு, சோ கூறினார்.
– நமது சிறப்பு நிருபர் –

 

__._,_.___

 

 

Follow @lokakshema_hari Tweet

 

Facebook

Published by

harikrishnamurthy

a happy go lucky person by nature,committed to serve others and remove their sufferings through all possible help. POSTS IN MY BLOG ARE MY OWN OPINION, COLLECTIONS OF INTERESTING ARTICLES FROM FROM VARIOUS SOURCES. MY ONLY AIM IS TO SHARE GOOD THINGS WITH OTHERS WHICH MAY BE USEFUL TO OTHERS AND NOT TO HURT ANY ONE'S FEELINGS. If you like my blog, like me,follow me, share with others, reblog If you have some suggestions post comments your suggestions and comments are eagerly awaited

Leave a comment