“ராஜாவின் கொம்பு“ சிறுகதை


“ராஜாவின் கொம்பு“ சிறுகதை

மரண பயம் தோய்ந்த காட்டின் உயர்ந்த மரங்களில் நீண்டு பழுத்தக்கிளை. அக்கிளை வசீகரமான கொம்பாகும் தகுதியில் இருந்தது. அது ஒன்றுதான் கொம்பாகும் தகுதியில் இருந்ததா? எத்தனை இருந்தாலும், பார்வைக்கு ஏதோ ஒன்று, இரண்டுதான் வசீகரிக்கும் என்பது உண்மையல்லவா?

ராஜா குடும்பத்திற்கு பயன்படவேண்டிய விறகுகளை சேகரிப்பதற்காகவே ஒரு கூட்டம் தினந்தோறும் காட்டைப் பதம்பார்த்தது. ராஜாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்த கட்டைகள் நிறைய உண்டு. அவைகளில் ஒன்றுதான் இக்கொம்பு. நீண்டு பழுத்த கொம்பு தனித்துவமான ஏதோ ஒன்றைப் பெற்றிருந்தது. பார்வைக்கு ஒழுங்காக திடகாத்திரமாக இருந்த கொம்பு, பலவகையில் பயன்பாட்டுக்கு உகந்ததாக இருந்தது. ராஜாவின் வேலையாள் அக்கொம்பை மொழு மொழுப்பாக்கி வைத்திருந்தான். அநேகமாக கொஞ்ச நாள் மட்டுமே வேலையாள் வைத்திருந்தான். நாளுக்கு நாள் அதன் மினுமினுப்பு கூடியிருந்தது. மந்திரியின் உதவியாளன், மந்திரி என்று கை மாறி இறுதியாக ராஜாவின் கையில் இருந்தால் பெருமை என்ற யோசனையின் அடிப்படையில், ராஜாவின் கைப் பிடியில்நின்றுகொண்டிருந்தது.

இதேக்கொம்பைதான், வேலைக்காரன். உதவியாளன். மந்திரி என பலர் கையில் வைத்திருந்தார்கள். அப்போதெல்லாம் இவ்வளவுதனித்துவத்தை யாரும் கண்டுபிடிக்கவில்லை. உண்மையிலேயே ராஜா தனக்குக் கிடைத்த கொம்பிற்காக மகிழ்ந்தார். இக்கொம்பால் தனக்கு அழகு கூடுவதாக நம்பினார். மந்திரி சபைகூட ராஜாவை கொம்புடன் பார்ப்பதை உள்ளுர ரசித்தார்கள். அப்படி விரும்புவதற்கு காரணமில்லாமல் இல்லை. ராஜா கையில் கொம்பு வராததற்கு முன்பு, நீண்ட வாள் வைத்திருந்தார். இருந்தாலும் அவ்வளவுகம்பீரத்தைத் தரவில்லை. வாள் உறையிலிடப்பட்டு தலைகவிழ்ந்துக் கிடந்தது. வாளும், ராஜாவும் ஒன்றிற்கு ஒன்று முரணான நிலையில் நிற்பதால், வீரத்தின் பிரிதிபலிப்பு கிடைக்கவில்லை. வாளின் வீரத்தைக் காட்டுவதற்கு ராஜாவிற்கு எந்த சந்தர்ப்பமும் வாய்க்கவில்லை.

இன்று ராஜா தன் கைக்குச் சரியான அளவில் கொம்பைப் பிடித்து நின்றார். ராஜாவின் உயரத்திற்கு சமமாக நின்றது. ராஜாவுடன் ஒரு ஆள்நிற்பதுபோன்று இருப்பதாலேயே கம்பீரம் அள்ளியது. மந்திரிசபை அவர் தோற்றத்தை புதிதாகப் பார்த்தது. ராஜா புதியவரா?பார்ப்போரின் கற்பனையூகம் அளவுகடந்ததா? குழம்பினார்கள். நாள் கடக்கக் கடக்க ராஜாதான் கொம்பு, கொம்புதான் ராஜா என்ற நிலைக்கு மந்திரிசபையும், குடிமக்களும் கணித்தார்கள்.

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், ராஜா எப்போதும் போலத்தான் இரவுப்படுக்கையில் கவுன் அணிந்து கொள்கிறார். காலையில்வழக்கம்போல தனக்கான கழிவறையில் மலம் கழிக்கின்றார். அந்தப்புறங்களில் வாழ்வின் தத்துவத்திற்கான பயிற்சியை எடுத்துக்கொள்கிறார். நாட்டு மக்கள் மீதான விசாரனையைத் தொடர்கின்றார். வாளை இடுப்பில் சொருகியிருந்தபோது செய்த,செயல்பாடுகளைத்தான் தற்போதும் செய்கின்றார். இருந்தாலும் நீண்டு பழுத்த கொம்பு அவர் கையில் வந்தபிறகு ராஜாவின் செயல்பாடுகள் மாறிவிட்டது என கூட்டங் கூட்டமாக குடிமக்கள் பேசிக்கொண்டார்கள். ராஜாவின் காதுபடவே இச்செய்தி பேசப்பட்டது. கத்தி இருந்தபோதும், கொம்பு வந்தபிறகும் தன் செயல்பாடுகள் எதையும் மாற்றிக்கொண்டதாக அவருக்குத் தெரியவில்லை. மக்களிடம்தானாக இப்பேச்சு மாற்றம் நடக்கிற தென்றாலும், ஜொலிப்பது நம் தலை கிரீடம்தானே என்று உள்ளூர நினைத்தார். கூடவே கொம்புக்குள் ஏதோ மகிமை இருப்பது உண்மை என்றும் நம்பினார்.

ராஜாவிற்கு இயல்பாகவே கொம்பின் மீது கூடுதல் அக்கறை ஏற்பட்டது. தன் நடைக்கு முன் கொம்பின் நடையை வைப்பது அவருக்குப் பிடித்துவிட்டது. படுக்கை அறையில் ராணியை அணைத்துக் கொண்டிருந்தாலும், முதுகுக்குப்பின்னால் ஒரு ஆளைப்போல் கொம்பைப்படுக்கவைத்திருந்தார். கொம்பு களவுபோய்விட்டால் தன் ராஜ்ஜியம் கவிழ்ந்துவிடுமோ, என்றளவில் ராஜாவின் மனதுக்குள் கருத்து பலமாக உருவாகிவிட்டிருந்தது. நீண்டு பழுத்த கொம்புக்கு கொடுக்கும் இடத்தை நினைத்து ராணியாருக்கு எரிச்சல் ஏற்பட்டது.

ராஜா கொம்பைப் பராமரிக்க இரண்டு பணியாளர்களை நியமித்தார். காலையில் ராஜா குளிக்கும் அறையில் அக்கொம்பைக் கழுவ உத்தரவிட்டார். தன் பார்வை முன் நடக்கவேண்டும் என விரும்பினார். ஒருவன் கழுவி முடித்ததும், இன்னொருவன் பட்டு துணியால்துடைத்து வெள்ளிக் குழவிபோன்ற கருவியில் நிறுத்தவேண்டும். பணியாளர்கள் அவ்வேலையை சரியாகச் செய்கிறார்களா என்பதற்காகவும், ராஜா தன் அறைக்குச் சென்று குளித்து வரும்வரை கொம்பை கண்காணிக்க மேலும் இரண்டு மேற்பார்வையாளர்களை வைத்திருந்தார். ராஜா காலைக்கடனை முடித்து மாற்றுடைத் தரித்துக்கொண்டு மீண்டும் தன் வசம் கொம்பைப் பிடித்துக்கொள்ளும் வரை, பணியாளர்களுக்கு அது முக்கிய வேலையாய் இருந்தது.

இன்னொரு நாள் ராஜா நகை செய்யும் கொள்ளரை அழைத்தார். கொம்பிற்கு விஷேசமான கிரீடம் ஒன்றை செய்து அணிவிக்கும்படி கட்டளையிட்டார். நாட்டின் பணிகளில் இதுவும் ஒன்று என்பதுபோல் நடந்தேறியது. கிரீடம் சூடி ராஜா கொம்புடன் நின்றபோது,ராஜாவால் கொம்பிற்கும், கொம்பால் ராஜாவிற்கும் பெருமையும், அழகும் கூடியிருந்தது.

இத்தனை மதிப்புக்குறிய இடத்திற்கு வந்ததை நினைத்து கொம்பு உள்ளூர மகிழ்ந்தது. அதன் கடந்த காலத்தை நினைத்து கண்ணீர் வடித்தது. ஆனால், இப்போது அது ஆனந்தக் கண்ணீர் என்பதில் நிம்மதியானது.

தன்னை சிறிதுநேரம் திரும்பிப் பார்த்து. ‘இதே மந்திரிசபையின் மூலையில் எத்தனை நாட்கள் நின்றிருந்தோம். மந்திரிமார்களோ,குடிமக்களோ நம்மை அவ்வளவு வீஷேமாக ஒருபோதும் நினைக்கவில்லையே. இத்தனைக்கும் மந்திரியின் உதவியாளன் ராஜாவிற்குமிக அருகில் பல முறை நின்றிருக்கின்றான். ஒருமுறைகூட ராஜாவின் பார்வையில் படாமலே இருந்திருக்கிறோமே. இன்று எல்லா துரதிர்ஷ்டங்களையும் மீறி தனக்கு ஈடான இடத்தில் நிற்கவைக்கும் அளவில் ராஜா, நம்மிடம் என்ன கண்டிருப்பார். அந்த இடத்திற்குறிய தகுதி உடையதுதான் என்பதை எதைக்கொண்டு நிரூபிக்க முடியும் என பலவாறு தனக்குத்தானே‘ யோசித்தது கொம்பு.

அரசபையின் சுமூகமான நகர்விற்கு மிக முக்கியமானவர்கள் மந்திரிகள், என்பது ராஜாவின் கருத்து. தினந்தோறும் நகற்கின்ற பொழுதுபோன்று சபை தானாக நகர்ந்தாலும், ‘இன்று அவைக்குள்ளிருந்து வெளிப்பட்ட ராஜாவின் முன்யோசனையான தீர்மானம்,பலகாலங்களிலும் பேசக்கூடியது. அவரின் ராட்சஷ பலம் எதிரணியைக் கலங்கடிக்கக்கூடியது.‘ என வார்த்தைகளை வாரி வழங்கும் நபர்களை, ராஜா புறம்பேத் தள்ளிவிடுவதில்லை. இந்த விஷயத்தில் நீண்டு பழுத்தக் கொம்பிற்கு லேசான உறுத்தல் இருந்தாலும்,ராஜாவின் இயல்பிற்காக தன்னையே ராஜாவின் சாயலில் ஒத்துபோகச்செய்துகொண்டது. ஏறக்குறைய ராஜாவின் விருப்பமே, கொம்பின்சேவை என்றாகிவிட்டது. சில நேரங்களில் ராஜாவிற்குத் தெரியாமல் கொம்பைக்கழுவும் பணியாளர்களைப்பார்த்து, யார் கண்ணிலும் பட்டுவிடாதபடி லேசாகச் சிரிக்கும் முகத்தைக் காட்டிவந்தது.

கொம்பிற்கு ஏற்கனவே காட்டின் மூலிகைச் சார்ந்த இயற்கை நறுமனங்களின் பண்பு இருந்தாலும், தற்போது நறுமனங்களின் மனம் கசிந்துவிடாதபடி, தன் நுண்மை துளைகளை அடைத்துக்கொண்டது. ராஜாவின் மேம்பட்ட கவனிப்பில் கிரங்கி தான் ராஜாவின் முழு நம்பிக்கையின் அடையாளம் என்றானது.

ராஜா தன் நடையை முன்னெடுப்பதற்கு முன், கொம்பை எடுப்பார். எடுத்ததுதான் தாமதம் ராஜா நினைப்பதற்கும் மேலாக இரண்டடி அதிகமாக கொம்பின் நடை நீளும்படியாக நகர்ந்து நிற்கும். யார் குற்றவாளி என்று விசாரிப்பதில் சிறமம் இருக்கும்போது கொம்பை லேசாக உயர்த்தினால்போதும் சரியான குற்றவாளியை காட்டும்படியாக நீண்டு நிற்கும். குடிமக்களுக்கு நீதி போதனைகளை சொல்லும்போது சில நேரம் ராஜாவின் உடல் மொழிக்கேற்றவாறு அசைந்துகொடுக்கும். ராஜா இவைகளை உண்ணிப்பாக கவனித்து மகிழ்ந்தார்.

ஒரு நாள் ராஜா, ராணியைக் கலவி கொண்டு உச்சத்தை அடைவதற்கு முன்னே திடீரென படுக்கையில் சரிந்தார். சற்று நேரத்திற்குள்ளாகவே மூச்சு நின்றுவிட்டது. ராணி அவசர அவசரமாக ஆடையை உடுத்திக்கொண்டார். ராஜாவின் குறி விரைத்தபடியாகவே இருந்தது. ராணியாருக்கு கையால் தள்ளி சாய்ப்பதற்கான யோசனை வந்தது. ஆனாலும், அப்படிச் செய்யவில்லை. பக்கத்தில் இருக்கும் கொம்பைப் பார்த்தார். அதைத் தொடுதலே அசிங்கம் என்றளவில் நினைத்தார், கொம்பைப் பயன்படுத்தவில்லை.சிறிது நேரம் செய்வதறியாமல் யோசித்து, தலையணையை எடுத்து ராஜாவின் குறியை மறைக்கும்படியாகப் போட்டார்.

பாதுகாப்பு மந்திரி விடுமுறையில் இருந்ததால், காவலாளனைக் கொண்டு நிதி மந்திரியை அழைத்தார். நிதி மந்திரி அறைக்கு வந்த அவசரத்தில் “என்னம்மா நடந்தது“ என்றார். மந்திரி இன்னும் ராஜாவைச் சரியாகப் பார்க்கவில்லை.

“மந்திரியாரே எப்போதும்போலத்தான் என்னுடன் கலவியில் ஈடுபட்டார், நானும் அதிகமாக ஈடுபடவில்லை. ஏனோ இப்படி நடந்துவிட்டது“

அப்போதுதான் மந்திரி ராஜாவின் கிட்டவந்துப் பார்த்து, இரவு கவுனை விலக்கி தலையணையை எடுத்தார். குறி அப்படியே இருந்தது. ராணியார் “அந்த்ச் சனியனை மடித்துவிடு மந்திரியாரே“ என்றவர், ராஜாவை ஒட்டி இருந்த கொம்பைப் பார்த்தார். சற்று தூர நின்றிருந்த பணியாளனை ஆத்திரத்துடன் அழைத்து “இந்தப் பாழாய் போன கொம்பை எடுத்து ஏதாவது முலையில் எறி“ என்றார்.

தலையணையை குறியின் மீது வைத்து மடித்துப்பிடித்தவாறே மந்திரி, ராணியாரை ஆச்சரியத்துடன் பார்த்தார்.

ஆம் மந்திரியாரே, இந்த முட்டாள் ராஜா என்னோடு கலவி கொள்ளும் போதெல்லாம் சில நேரம் கொம்பை அடிக்கடித் தொட்டுப் பார்த்துக்கொள்வார். அச்சமயம் எப்போதும் இல்லாதபடி முரட்டுத்தனமாக இயக்கம் கொள்வார் இன்றும் அப்படித்தான் நடந்துவிட்டது. பிறகு ராணியார், எல்லா நிகழ்வுகளையும் சுமூகமாக நடத்தியிருந்தார்.

ராணியார் அறை முழுவதும் ஒழுங்கு படுத்தும்படியாக சொல்லி இருந்தார் அப்பொறுப்பில் கொம்பைக்கழுவும் பணியாளனும் இருந்தான். மற்றெல்லா வேலைகளையும்விட கொம்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பதில் அக்கறையாக இருந்தான். ஒரு வழியாக பயனற்ற பொருட்களுடன், நீண்டு பழுத்தக் கொம்பும் தலைக்குப்புற விழுந்துகிடந்தது. ஒருவரால் மிக உயர்ந்ததாகக்கருதப்படும் பொருள், இன்னொருவரால் மிக அற்பமாகத் தூக்கி எறியப்படுவது எப்படி? அப்போது, உண்மையிலேயே அப்பொருளின் தரம் என்பது என்ன? என்று யோசித்தவன் கொம்பிற்கான வெள்ளிக் குழவியைத்தேடி இன்னொரு இடத்தில் பாதுகாப்பாக வைத்தான். அநேகமாக ராணியாரின் பார்வையில் படும்படியாக இருக்கவில்லை.

ராணியார், இதற்கு முன் இல்லாதபடி ஆடைகளை புதுவிதமாக உடுத்திக்கொண்டார். இப்போதும் அரண்மனையில்தான் இருந்தார். என்றாலும் பல விஷயங்களை மாற்றி அமைக்கின்றார். ராஜா இருந்தபோதும் அக்காரியங்கள் இருந்திருக்கின்றன. அவைகளை மாற்றவேண்டும் என்ற யோசனை ராணியாருக்கு வந்திருக்குமாத் தெரியவில்லை. நீண்டு பழுத்த கொம்பைப் பராமரித்தபணியாட்களை, அந்தப்புறத்தில் புதிய செடிகளைக் கொண்டுவந்து நடும்படியாகவும், வெப்பக்கதிர்களை அடக்கிக்கொண்டு அடர்சிவப்பும்,மஞ்சளும், வெள்ளையும் கலந்து சாதுவாக எழும், மறையும் காலை, மாலை சூரியனின் அதேத் தன்மையைப் பதிவுசெய்து, இரவு ஒன்பதிலிருந்து பதினோரு மணிவரையும், பின்னிரவு மூன்றிலிருந்து ஐந்துவரையிலும், தோட்டங்களில் தினந்தோறும் வெளிச்சங்களாகபிரிதிபலிக்க வைக்க வேண்டும் எனவும் கட்டளையிட்டார்.

கொம்பைப் பராமரிக்க வேறு ஆட்களை நியமித்தாரா? என்பது முன்னாள் பணியாட்களுக்குச் சந்தேகமாகவே இருந்தது. ஒரு வேளை வெளி நாட்டில் அரசியல் படிக்கும், தன் மகன் வந்து ராஜ்ஜியத்தை கையில் எடுத்துக்கொண்டால், அவர் என்னவெல்லாம் மாற்றம்செய்வாரோ என்ற யோசனைகளும் பணியாட்களுக்கு இருந்தது.

அரசபையில் கூடும் மந்திரிமார்கள், ராஜா அறையில் நுழைவது என்பது கடினம். பணியாளர்களுக்கு அத்தகைய கஷ்டம் இருப்பதில்லை. அறையின் வேலைகள் அனைத்தும் பணியாள்கள்தான் பார்க்கவேண்டும். அப்படித்தான் ராஜா, அறைகளில் கொம்பைக் கழுவியப் பணியாளன் அடிக்கடி வந்தான்.

திரைச்சீலைகளின் தூசுகளைத் தட்டும்போதே, சற்று தூரத்தில் வெள்ளிக்குழவியில் இருக்கும் நீண்டு பழுத்தக் கொம்பைப் பார்ப்பான். கொம்பு தனக்கு ஏற்பட்டுவிட்ட நிலையை மறக்கமுடியாமல் முன்னாட்களில் ராஜாவிடம் இருந்தபோது, தனக்குக் கொடுத்த அங்கீகாரத்தையே நினைத்து, பெருமிதமும், தற்போது எப்படி அதை இழந்தோம் என்ற வருத்தமும் ஒருசேர பதிந்து வைத்திருப்பது முகத்தில் தெரிந்தது.

ராஜா மறைந்து கொஞ்ச நாட்கள் கடந்துவிட்டிருந்தாலும், ராணி ஒருபோதும் அக்கொம்பின் முகத்தைப் பார்க்கவேயில்லை. ராணியார் பார்க்காமல் போனால் என்ன? ராஜா மிக உயர்ந்த இடத்தில் வைத்திருந்த மரியாதைக்காவது அக்கொம்பைக் கழுவிவைக்கச்சொல்லலாம். அவ்வார்த்தையை ராணி உதிர்ப்பாரா? பணியாளன் உள்ளுர காத்திருந்தான். அது நடக்காமலேப் போனது. உத்தரவே இல்லாமல் பணியாளனாக மனமுவந்து கழுவி வைப்பதற்கு சற்று பயமாகவும் இருந்தது. ராணிக்கு பிடிக்கிறதென்றால் கூடுதலாகச் செய்யலாம். பிடிக்காத பட்சத்தில், சொல்லாத வேலையை பணியாளன் செய்வது, தெரிந்துவிட்டால் அவன் வாழ்வாதாரமே பாத்திக்கப்பட வாய்ப்புண்டு. அதற்காகவே பணியாளனுடன் இருந்த மற்றப் பணியாளர்கள் ராஜா அறைக்கு வராமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு பாராமுகமாய் போய்விடுகிறார்கள். கொம்பைக் கழுவும் பணியாளன் மட்டும், எல்லா மனிதனுடைய வாழ்வும்போலத்தான். இக்கொம்பின் வாழ்வும் சீக்கிரம் முடிந்துவிட்டது.

ராஜா அதன் வசீகரத்தை எப்படியெல்லாம் புகழ்ந்தார். அரண்மனையிலோ, குடிமக்களிடமோ அதன் பிம்பம் பதிந்திருந்தாலும்,அவைகளால் கொம்பிற்கு பயன் ஏதும் இல்லையே. பணியாளன் யோசித்தான். ராஜாவின் அறைக்கு வரும்போதெல்லாம் அனுக்குகொடுக்கப்படும் பணிகளை வேகமாக முடித்துவிட்டு, கொம்பின் அருகில் சென்று ஈரத்துணியால் துடைத்து, வெள்ளிக்குழவியில் வைத்திருக்கிறான். அப்போதெல்லாம் அக்கொம்பு, அரசபைக்கு எப்படியும் ராஜாவின் மகன் வரப்போகின்றார். அவர் அப்பா நம்மை வைத்திருந்த நிலமைத்தெரிந்ததும், நமக்கான அந்தஸ்த்தை கொடுத்துவிடுவார். அச்சமயம் பணியாளனுக்கு நாம் ஏதாவது செய்வோம் என்றக் கணிப்பில்தான், ராணியாருக்குத் தெரியாமல் கவனிக்கின்றான் என்ற எண்ணமும் இருந்தது.

கொம்பின் உடல்மொழியை பணியாளன் அறிந்திருந்தான். இன்னொரு விஷயமும் நன்றாகப் புரிந்திருந்தது. ‘எந்தநாளும் அவ்வளவு சுலபமாக ராஜா அங்கீகரிக்கும் படியான நன்மை கிடைக்கப்போவதில்லை என்பதுதான். இருந்தாலும், கொம்பு வெளியிடும் இயல்பான மனங்களில் விருப்பமுடையவனாக இருப்பது பணியாளன் விருப்பமாக இருந்தது.

ராணியார் அரசபைக்கு புதிய ராஜாவை அறிமுகம் செய்கின்றார். ஒவ்வொரு மந்திரியாக அறிமுகம் செய்கின்றார். இடை இடையில்அந்தந்த மந்திரிகளின். தனித்தன்மைகளை, பெருமையாகவும் சில மந்திரிகளின் நிர்வாகத்தில் இருக்கும் குறைகளை லேசான நகை தொனியுடன் சுட்டிக்காட்டினார். தனக்கு ஒரே மகன் என்பதால் நாட்டின் பல விஷயங்களைக்குறித்து. திறம்பட செய்திகளைச் சொன்னார்.

குடிமக்களின் வாழ்வாதார நிலை, வருவாய், நாட்டை பீடிக்கும் முக்கியமான பிரச்சனையெல்லாம், அரசபைக்குள் பாதுகாக்கவேண்டிய விஷயங்கள். நம்மிடம் இருக்கும் பணியாளர்கள், நமக்கு எதிராக வேலை பார்க்காதபடி இருக்கவைப்பதும்தான் என்று ஒன்றுவிடாமல் அவ்வளவு விரிவாக உரையாற்றினார்.

கேட்போருக்கு ‘திறமையின் களஞ்சியமாக இருக்கும் ராணியார். அரசபையை தானே நடத்தலாம். ஏனோ சீக்கிரமாகவே தன் மகனிடம்ஒப்படைத்துவிட்டார். அவர் அனுபவமற்றவர், படிப்பை மட்டுமே வைத்துக்கொண்டு அரசபை நடத்த வரும்போது, சபையில் இருக்கும் அனுபவசாலிகள் ராஜாவை கைக்குள் வைத்துக்கொள்ள ஏதுவாகத்தானே இருக்கும்‘ என்றும் பேசிக்கொண்டார்கள். அதேவேளையில்,கொம்பைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட பேசாதது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருவேளை மறந்திருப்பாரோ? இருக்கமுடியாது.வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறார். என்பதை அறிந்துகொண்டார்கள். ராஜாவின் கையில் இருக்கும்போது கொம்பின் புகழை பாடிக்கொண்டேயிருந்த மந்திரிகள், குடிமக்கள் அத்தனைபேரும் மறந்துகூட புதிய ராஜாவிடம் கொம்பைப்பற்றிய பேச்சையே எடுக்கவில்லை. சபைக்கு மிக அருகில்தான் கொம்பு தன் குழவியில் இருக்கிறது என்றாலும், அதன் பக்கம் எந்த அமைச்சரும் தலைக்காட்டவில்லை. காலங்கள்தான் நகர்ந்துகொண்டிருந்தது.

கொம்பு இப்போதுதான் உண்மையிலேயே நடைமுறை எதார்த்ததை உணர்ந்தது. ராஜாவோடு இருந்தகாலம் எவ்வளவுபெருமைக்குறியது. அவைகளின் பிம்பத்தை யார் மறந்துவிடமுடியும். நடந்து முடிந்த கடந்த காலத்தின் மேன்மை தங்கிய நாட்களையே மீண்டும் மீண்டும் நினைத்து நிக்ழ்காலத்தைக் கடத்திக்கொண்டிருந்தது.

ஒரு நாள் அரசபை சாராத இளைஞன் வந்தான். அவனுக்கு இயற்கை வைத்தியத்தில் அனுபவமும், நம்பிக்கையும் இருந்தது. ஒருகையில் ராஜாவின் மகனுக்கு அறிமுகமானவன். தற்போது ராஜாவாக இருப்பதால் சற்று தயக்கத்துடன்தான் அரண்மனைக்கு வந்தான். புதிய ராஜாவிற்கு தெரிவிக்கப்பட்டது. ராஜாவும் தனக்கு அறிமுகமானவனா? யாராக இருக்கும். ஐயத்துடன்தான் பார்க்க அனுமதித்தார். சந்திக்க விரும்பியவன் வரும்வரை யோசனை நிலையில் இருந்தார். அந்நபர் கிட்ட வர வர எங்கேயோ பார்த்தமுகமாய் இருந்தது. ஒரு முறை தான் படித்த வளாகத்தில் இருந்த அறியவகைச் செடிகளை ஆய்வு செய்வதற்காக, பல்வேறு நாட்டிலிருந்து இளைஞர்கள் குழுவாக வந்திருந்தார்கள். அக்குழுவில் இந்த இளைஞனைப் பார்த்திருக்கின்றார். தன் நாட்டின் குடிமகன் சாயலாக இருந்த காரணத்தினால், அவனிடம் பேசி விசாரித்திருக்கின்றார். பிறகுதான் நினைவுவந்தது. புன்னகையுடன் இருவரும்கைகுலுக்கிக்கொண்டார்கள். இப்போது என்ன விஷயமாக வந்திருப்பான் என்ற ஐயமும் இருந்தது.

மூலிகை இளைஞன் பேசினான். “நீங்கள் இந்நாட்டின் ராஜாவாக வந்தது மிக்க மகிழ்ச்சி தங்களைப்போன்ற இளைஞர்களால்தான் இயற்கையை வளர்த்தெடுக்க முடியும். மேலும், நான் வந்த விஷயம். “எங்கள் ராஜா, உங்கள் அப்பா கடைசிக்காலங்களில் இயற்கை மீது அதிக நம்பிக்கை உள்ளவராக இருந்தார். அதன் அடையாளம்தான், ராஜாவான தோற்றத்திற்கே கம்பீரமான உறைவாளைக்கூடத் தூக்கிஎறிந்து, மூலிகை சக்திவாய்ந்த நீண்டு பழுத்தக் கொம்பை தன்னுடன் வைத்துக்கொண்டார். அக்கொம்புடன் அரசபைக்கு வரும்போதெல்லாம், புதிய நம்பிக்கையுடன் செயல்பட்டார். அவருடைய செயல்பாடுகளில் மக்கள் அதிக நம்பிக்கை வைத்தனர். உண்மையிலேயே அக்கொம்பிற்கு அற்புதமான மகிமையிருக்கிறது. அதை உங்களுக்கு ஈடாக வைத்துக்கொண்டால் உங்களுடையஅரசாட்சி சிறப்படையும். சபையாலும், குடிமக்களாலும் பாராட்டப்படுவீர்கள்“ என்றான்.

புதிய ராஜாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. உண்மையைச் சொல்வதென்றால், அதுவரை அக்கொம்பைப் பற்றி யாருமேச் சொல்லவில்லை. “அது எப்படி இருக்கும். தன் அறைக்குள்ளேயே இருந்திருக்கிறது. என் கண்ணில் படவே இல்லை. யாரும்கூட சொல்லவும் இல்லை. ராஜா உதவியாளர்களை அழைத்தான். இவர் சொல்லுகின்ற கொம்பு எங்கே இருக்கின்றது“

உதவியாளன் அழைத்துச்சென்றான். புதிய ராஜாவும், மூலிகை இளைஞனும் பின்னாக நடந்தார்கள். அலங்கார அறையைக் கடந்தார்கள். சில அறைகளுக்கு முன் இருந்த நடைபாதை வழியாகச்சென்றான். முன்னாள் ராஜா அலுவல் பார்க்கும் அறை வந்தது. அதைஒட்டியிருந்தார்போல ஓய்வறையும் இருந்தது. அவ்வாசலின் திரைச்சீலை முழுமையாக மூடியிருந்தது. உதவியாளன் திரைச்சீலையை சற்று வேகமாக ஒதுக்கியபோது சர்க்… எனும் சத்தம் எழுப்பியது.. சத்தத்தைக் கேட்டவுடன், எதிர்முனை மாடங்களில் அமர்ந்திருந்த கலர் கலரான புறாக்கள் படபடத்து ஓடின. புதிய ராஜா திரும்பிப் பார்த்தான். ஜோடிப்புறாக்களை மட்டுமே பார்க்கமுடிந்தது. புதிய ராஜாவிற்கு அதில் நாட்டம் செல்லவில்லை. அரசபைக்கு ஈடான இன்னொன்றை பார்க்கும் ஆவலை மூலிகை இளைஞன் ராஜாவிற்கு ஏற்படுத்தியிருந்தான். ‘விளக்குத்திரியைக் கொளுத்தி விட்டு, வேடிக்கைப் பார்ப்பவன்போல், பிறகு எதையுமே பேசவில்லை.வெளிச்சத்தை அறிந்துகொள்ள விளக்கம் தேவையா என்றளவில் அவன் தொனி இருந்தது.

உதவியாளன் நடந்துகொண்டிருந்ததை நிறுத்தவில்லை. இன்னும் ஏதோ பயன் படாத இடத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தான். ஏறக்குறைய கடந்த ராஜாவின் ஓய்வறையுடன் இணைந்திருந்த கழிவு அறையை ஒட்டி, தேவையற்றப் பொருட்களை குவித்திருந்த இடத்திற்கு முன்னதாக வெள்ளிக்குழவியில் நீண்டு பழுத்த கொம்பு இரும்புத்தூணில் இணைக்கப்பட்டிருந்தது.

கொம்பைக் கழுவும் பணியாளன் பல நேரம் ராணியாருக்குத் தெரியாமல் துடைத்து விட்டதால் கொம்பின் மேனி அவ்வளவாக மங்கியிருக்கவில்லை. ஒரு மூலையில் இருந்து, கொம்பின் கிரீடத்திலோ, பின்பக்கமாகவோ ஒட்டியவாறு சிலந்திக்கூடுகள் வலை பின்னியிருந்தன.

மூலிகை இளைஞன் உதவியாளனைப் பார்த்து. “இக்கொம்பை யாராவது பராமரிக்கின்றார்களா?“ என்றான்.

“ராஜா மறைவுக்குப்பிறகு இந்த இடத்திற்கு அநேகமாக யாரும் வரவில்லை. ராணியார் வாரம் ஒரு முறை அறைகளைச் சீரமைக்க,சில பணியாளர்களை மட்டும் அறைக்குள் அனுமதிப்பார்கள். அப்பணியாளர் முக்கால்வாசி அறிவிலிகள், கூடவே சோம்பேறிகள். மகிமை வாய்ந்த பொருட்களின் மீதோ, கலை சம்பந்தப்பட்ட காரியங்களிலோ ஈடுபாடற்றவர்கள். அவர்களாக தானாக முன்வந்து இவைகளையெல்லாம் சுத்தப்படுத்தமாட்டார்கள். மேலும் ராணியாருக்கு இக்கொம்பென்றாளே கடுங்கோபம் வரும். ஆக அதன் முகத்தைக்கூட எந்தப் பணியாளனும் பார்க்கமாட்டான் என்பது தெளிவான உண்மை“

மூலிகை இளைஞன், ராஜாவைப்பார்த்தான். “ராஜா, அதன் மகிமையைப் பார்த்தீர்களா? நம் ராஜா இறந்து சில வருஷங்கள் கழிந்துவிட்டன. யாரும் பராமரிக்கவும் இல்லை. அதன் தலையில் இருக்கும் கிரீடமாவது லேசாக மங்கியிருக்கிறது. கொம்பின் பழுப்பு நிறமேனி தங்கத்தை ஒத்த ஜொலிப்பில் இருப்பதை நீங்கள் அறிகிறீர்களா? அதனால்தான் முந்தைய ராஜா கொம்பின் மதிப்பறிந்து தனக்கு ஈடாக வைத்திருந்தார்.

உங்கள் நம்மைக்காகச் சொல்கிறேன். உங்கள் கைப்பிடிக்குள் இக்கொம்பு இருந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசபைக்கான கம்பீரம் புலப்படும். அதன்மூலம் சபை இயல்பாக நடந்தேற உதவும். ஒரு வேளை செயல்பாடுகளில் கம்பீரம் குறைவாக இருந்தால்,அரசபை மந்திரிகளுக்கு, சபையை முன்னேற்றப் பாதையில் நடத்த அடிக்கடி விண்ணப்பம் வைக்கவேண்டும். மிக முக்கியமான காரியம். இதை சிறப்பாக யோசியுங்கள்“ என்றான்.

புதிய ராஜா கொம்பைக்குறித்து விவாதிப்பதற்காகவே சிறப்பு சபையைக் கூட்டினார். இக்கூட்டத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை.ராணியாருக்குத் தெரியாமல் ரகசியமாகவும் போடப்பட்டது. இன்னொரு முக்கியமான விஷயம், சபையில் மந்திரிகளின் இலாக்கா வரிசைக்கிரயமாக அமரவைக்கவில்லை. சபைக்குப் பக்கத்தில் இருந்த நடன அரங்கில் கூட்டினார். ராஜா மட்டும் மேடையின் பிரதான இருக்கையில் அமர்ந்தார். சற்றுத் தள்ளி மந்திரிமார்கள் மற்றும் அதிகாரிகள் இருக்கை இருந்தது. இடது பக்கத்தில் ஐம்பது வயதிற்குமேல் இருந்தவர்களையும், வலதுபக்கத்தில் ஐம்பது வயதிற்கு குறைவாக இருந்தவர்களையும் அமரவைத்தார்.

புதிய ராஜா தொடங்கினார். “நாம் அனைவரும் மக்களின் நலனுக்காக இயங்குகின்றவர்கள். நான் அரசனாக இருந்தாலும், ஒன்றுபட்ட மக்களைவிட உயர்ந்தவன் அல்ல. நீங்களும் அப்படித்தான் கருதிக்கொள்ள வேண்டும். ஆனால், தனி மனிதன் நாட்டின் கட்டமைப்புக்கு கட்டுப்பட்டவன். அதாவது, அரசனுக்கு கட்டுப்பட்டவன். நம் அரசு மக்களின் நலனில் அதிக அக்கறையுள்ளவையாக இருக்கவேண்டும். அதற்காகவே நம் அன்றாட செயல்பாடு அமையவேண்டும். நான் அரசை நடத்துவதற்கு புதியவன் என்றாலும், அதற்கானதகுதியில்லாதவன் அல்ல. அதே சமயம் அரசின் நாடித்துடிப்பை முற்றிலும் அறிந்தவனும் அல்ல. அப்படி இருக்க என் தந்தையின் நற்காரியங்களை எனக்கு மறைத்துவிட்டீர்கள்“

மந்திரிமார்கள் ஒருவரின் ஒருவர் முகம் பார்த்தார்கள் பலருக்கு பயம்கூடிற்று. ராஜா எந்த காரியத்தைக்குறித்து சொல்லுகிறார். எதோ நடந்துவிட்டிருக்கிறது என கலக்கமடைந்தார்கள்.

புதிய ராஜா மீண்டும் தொடர்ந்தார். “என் தந்தையாரின் கடைசிக் காலங்களில், எல்லா வகையிலும் மிகத்திறமையான ஆட்சி புரிந்திருக்கிறார். அதற்கு ஒரு பொருள் மிக முக்கியப் பங்காற்றியிருக்கிறது. அதுகுறித்து ஒருவர்கூட என்னிடம் கூறவில்லை. உங்களை என்னவென்று நினைப்பது. என் அரசாட்சி சரியாக நடக்கக்கூடாது என, நீங்கள் நினைப்பாதாக எடுத்துக்கொள்ளலாமா?“ என நிறுத்தினார்.

அச்சமயம் நலிந்த கலைஞர்களுக்கான மந்திரி “மன்னிக்கனும் ராஜா. நீங்கள் யாரோ அல்ல. எங்கள் அன்பிற்குறிய ராஜாவின் புதல்வர். உங்களின் அரசபையை நாங்கள் மனதார வரவேற்கின்றோம். அதே சமயம் எங்கள் முழு ஒத்துழைப்பையும் தரக்காத்திருக்கின்றோம். எதுவாயினும் நீங்கள், வெளிப்படையாகச் சொன்னால், எங்கள் தவறுகளைத் திருத்திக்கொண்டு பணியாற்றுவோம்“ என்று சொல்லி அமர்ந்தபோது பல மந்திரிகள் சேர்ந்தார்போல தொப்தொப்பென்று பென்சைப் பலமாகத் தட்டினார்கள். இன்னும் சிலர் “ஆமாம் ராஜா,அதுதான் உண்மை“ என உரக்க பேசினார்கள்.

புதிய ராஜா தொடர்ந்தார்“ மிக்க மகிழ்ச்சி. இன்று அவைக்கூட்டியதின் முக்கிய விஷயமே. என் தந்தை கடைசிக் காலங்களில் நீண்டு பழுத்த கொம்பு வைத்திருந்தார் என்பது உங்களுக்கும் தெரியும். அவரின் கைக்கு அக்கொம்பு வந்தபிறகுதான், பெரிய மாற்றம் வந்ததாக பல அறிஞர்கள் சொல்கின்றார்கள். கூடுதலாகச் சொல்வதென்றால் கொம்பு வந்தபிறகு, ராஜாவுக்கே உறித்தான நீண்ட வாளைக்கூட தவிர்த்துவிட்டார். எனக்கு அது ஆச்ரியமாக இருக்கிறது. முன்னோர்களின் வழிமுறைகளை அவ்வளவு சீக்கிரத்தில் உதாசினப்படுத்திவிடமுடியாது. ஆனால், என் தந்தை வைத்திருந்தார் என்பதற்காக அதையே நானும் வைத்திருக்கவேண்மோ?இவ்விஷயத்தில் எனக்கு குழப்பமா இருக்கிறது. அது பற்றி விவாதிக்கவே அவையைக் கூட்டியிருக்கிறேன். நான், என் தந்தை வைத்திருந்த கொம்பு வைத்துக்கொள்வது நல்லதா? அல்லது எனக்கென்று பிரித்தியேகமான நீள வாள் செய்துகொள்ளலாமா? உங்கள் யோசனையைச் சொல்லுங்கள். முதலில் இடப்பக்கம் இருப்பவர்கள் ஆரம்பியுங்கள்“.

ஏறக்குறைய கடைசி இருக்கையில் இருந்து முதலாவதாக எழுந்த கலாச்சாசரம் மற்றும் பண்பாட்டுத்துறை மந்திரி “ராஜா வாழ்க“என்றவர் சற்றுப் பேச்சை நிறுத்தினார். பிறகு குரலைச் செருமிக்கொண்டு “எங்கள் ராஜாவும், உமது அப்பாவுமான நம் ராஜாவின் ஆட்சிக்காலம் என்பது பொன் எழுத்துக்களால் பதிப்பிக்கப் படவேண்டியது. மக்களை மிகச்சிறந்த முறையில் வழிநடத்தினார் என்பதற்கு பல நாடுகள் அளித்த வாழ்த்துச் சான்னொன்றே போதும். இருந்தாலும் கடைசி மூன்று, நான்காண்டுகள் ஆட்சியில் ஒரு வேகம் இருந்தது. அதற்கு முக்கியக் காரணம், அவர் கைக்குள் பிடித்திருந்த நீண்டு பழுத்த கொம்பு. ராஜாவிற்கு மிகப் பொறுத்தமானத் தோற்றத்தை அதுதான் வழங்கியது. நான் ராஜாவிடம் முக்கியமாகக் கவனித்தது உண்டு. ராஜா நடக்கும்போது அக்கொம்பைஊன்றுகோலாகப் பயன்படுத்தவில்லை. நிற்கும்போது மட்டுமே தனக்கு ஈடாக தரையில் ஊன்றி பிடிப்பார். அது ஒரு பிரமாண்டமான கம்பீரத்தைக் கொடுக்கும்“

புதிய ராஜா குறிக்கிட்டு “மந்திரியாரே, தாங்கள் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுத்துறையில் செயல்படும் விதமாகவே குழப்பத்துடன் பேசுகிறீர்கள். மற்றெல்லாரிடமும் நான் கருத்துக் கேட்க வேண்டாமா? நான் கொம்பைப் பயன் படுத்தட்டுமா? நீள வாள் வைத்துக்கொள்ளட்டுமா? இவைகளை வைத்துக்கொள்வதால் அரசனான எனக்கு எந்த வகையில் பயன் என்பதை மிகச்சுருக்கமாக இரண்டொரு வரிகளில் சோல்லவேண்டும். நான் பலருடைய பதிலைக் கேட்க ஆவலாய் உள்ளதால், உங்கள் கருத்து சுருக்கமாக இருந்தால் போதுமானது.“

அவையில் பலர் கொள்லென்று சிரித்துவிட்டார்கள். பண்பாட்டுதுறை மந்திரி அமர்ந்துவிட்டார்.

நிதி மந்திரி எழுந்தார் “ராஜா வாழ்க. முன்பு நம்முடைய ராஜா அக்கொம்பை வைத்துக்கொண்டபிறகுதான், அரசபை திறமையாக நடத்தமுடிந்தது. என்பதை நான் மறுக்கிறேன். ராணியாருக்கு அதன் மதிப்பு தெரிந்திருந்தது. ஆகவேதான் அதை முற்றிலும் ஒதுக்கியிருந்தார். ஆகையால், நீங்கள் ராஜாவிற்குறிய கம்பீரத்தோடு இருப்பதற்கு நீள வாள் போதுமானது“

நிதி மந்திரி சொல்வதை நான் மனப்பூர்வமாக வழிமொழிகின்றேன். என அடுத்தடுத்து இரண்டு, மூன்று மந்திரிகள் எழுந்துரைத்து அமர்ந்தார்கள்.

புதிய ராஜா தொடர்ந்தார். “ஒருவர் கருத்துச் சொல்லி முடித்தபின்பு, அவரை ஒட்டி வழிமொழிகின்றேன் என்று சொல்வது மிகவும் சுலபமான வேலை. உங்களுக்கென்று ஒரு கருத்து இருந்தும், வெளிப்படுத்தத் தெரியாமலோ, அல்லது வெளிப்படுத்தமனமில்லாமலோதான் வழி மொழியும் காரியத்தைச் செய்துவிடுகின்றீர்கள். அப்படி இருக்கவேண்டாம் உங்களுக்கென்று இருக்கும் கருத்து எதுவானாலும் மனம் விட்டு பேசுங்கள் அப்போதுதான், அரசபை நடத்துவதற்காக என் முழு திறமையையும்பயன்படுத்தமுடியும்.“

அவையோர் என்ன இந்த ராஜா. எப்படி எழுந்தாலும் மடக்கிவிடுகின்றார் என்று சிறிதுநேரம் மௌனமாக இருந்தார்கள்.

புதிய ராஜா “சரி வலது பக்கம் இருப்பவர்கள் சொல்லுங்கள். நான் நீண்ட வாள் வைத்துக்கொள்ளட்டுமா? நீண்டு பழுத்த கொம்பு வைத்துக்கொள்ளட்டுமா? “

மக்கள் தொடர்பு மந்திரி எழுந்தார். “ராஜா வாழ்க, மன்னிக்க வேண்டும், நீங்கள் எங்களைத் தெளிவற்ற இடத்தில் நிறுத்தி தீர்வுக்கான பதிலை எதிர் பார்க்கின்றீர்கள். உண்மையிலேயே நாங்கள் திணறுகிறோம் என்பதுதான் உண்மை. ராஜா அவர்கள், என்னை இரண்டு நிமிடம் கூடுதலாகப் பேச அனுமதிக்க வேண்டும். நான் வைக்கும் சிறு குளுவால், இன்றய அவை ஒரு முடிவை நோக்கிச் செல்லவாய்ப்பிருக்கிறது.“

“மக்கள் தொடர்பு மந்திரி, ஏதோ சொல்ல வருகின்றார் என்பது புரிகின்றது. சொல்லுங்கள் மந்திரியாரே“

“நன்றி ராஜா, இந்த அவையில் என்னைவிட, அனுபவம் மிக்கவர்கள், திறமைசாளிகள் இருக்கின்றார்கள் என்பதை அறிவேன். நான் வைக்கும் வாதம் தீர்க்கமானது என்று சோல்லமாட்டேன். அவ்வாதத்தைத் தொடர்ந்து, ஒரு தீர்வை நோக்கிச்செல்வதற்கான ஆரம்ப வழி என்பதை மட்டும். தன்னடக்கத்துடன் சொல்லிக்கொள்கிறேன். பிரித்தியேகமான வாள் என்பதும், நீண்டு பழுத்த கொம்பு என்பதும் வெறுமனேபொருள்கள் என்று மட்டும் கருதிவிடமுடியாது. நம்முடைய முன்னாள் ராஜா நீண்டு பழுத்த கொம்பைக் காரணமில்லாமல் எந்நேரமும் தன்னுடன் வைத்துக்கொள்ளவில்லை. அது உளவியல் சார்ந்தது. அதி முக்கியமானது. தன்னளவில் சமமாய் ஒரு பொருள் தன்னுடைய கைக்குள் இருக்கும்போது மனம் இன்னொரு ஆள் தன்னோடு இருப்பது போன்ற உணர்வு வருகின்றது. உணர்வு என்பதுகூட முக்கியமல்ல. தன்னுடன் இருக்கும் ஆள்தன்மை பிம்பத்திற்கு, அதற்கென்று ஒரு மனம் இல்லாது, செயல் இல்லாது லட்சியம் இல்லாது தன்னை வைத்திருக்கும் நபருக்கு விசுவாசமாய் இருப்பதென்பது உலகத்தில் எந்த உயிர் உள்ள ஜீவராசியாலும் இயலாதது. அவ்விதமானப் பணியை நீண்டு பழுத்த கொம்பு செய்தது, என்று முன்னாள் ராஜா நம்பினார். அதற்காகவே அக்கொம்பை எப்போதும் தன்னுடன் வைத்திருந்தார்.

நீள வாள் ஆணவத்தின் மறுஉருவம். ராஜாவிற்கு மிக அலங்காரமான உடைபோன்றதுதான். ஆனால்,ஒருபோதும் வாள் பல் வினைப் பயனாற்றுவதற்கு பயனற்றது. பெரும்பாலும் மிரட்டல் தொனிக்காகவும், ரத்தம் சிந்துதலுக்காகவுமே பயன் படுகின்றது. இச்சித்தாந்தத்தில் நம்பிக்கையற்றவரான உங்கள் தந்தை, நம்முடைய ராஜா மிகச்சரியாகவே மக்களை வழிநடத்தினார் என்பது உலகறிந்த உண்மை. என் கருத்தாக சொல்ல வருவது புதிய ராஜாவிற்கு நீண்டு பழுத்த கொம்பை வைத்துக்கொள்வதின் மூலம் திறம்பட ஆட்சிப்பணியை நடத்தலாம் என்பது என் நம்பிக்கை“

புதிய ராஜா அவரின் பேச்சுக்கு எதையுமே சொல்லவில்லை. இன்னொருவர் யாராவது கருத்து சொல்லமுடியுமா“ என்றார்.

பாதுகாப்பு மந்திரி சற்று ஆவேசமாக எழுந்தார். எதிர்பாராமல் தன் கையில் வைத்திருந்த குறிப்பை கீழேத் தவறவிட்டார். அவருக்கு நேராக காற்றாடி இருந்ததால் குறிப்பு பறந்து ஓடியது. ராஜா உட்பட கலகலவென்றுசிரித்துவிட்டார்கள். பலருக்கு பாதுகாப்பு மந்திரிக்கு தன் குறிப்புச்சீட்டையே பத்திரமாக வைத்திருக்க முடியவில்லை. என்பதாக அச்சிரிப்பு இருந்தது. ஏற்கனவே மக்கள் தொடர்பு மந்திரியின் பேச்சில் கோபமாக இருந்த அமைச்சருக்கு மேலும் சூடேறியது

அப்பதட்டத்தில் தன் பேச்சைத் தொடங்கும் முன் சம்பிரதாயமாக “ராஜா வாழ்க“ என்று சொல்வதைக்கூடமறந்துவிட்டார். எடுத்த எடுப்பில் மக்கள் தொடர்பு மந்திரி, மக்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்போல் தன் கருத்தை வைக்கின்றார். நாம் எப்படியான சூழலில் வாழ்கின்றோம் என்பதுக்கூடத் தெரியவில்லை. நம்மைச் சுற்றியுள்ள நாடுகள் பலவிதமான ஆயுதங்களை கையாள்வதில் பயிற்சி பெறுகின்றார்கள். நாளுக்கு நாள். மனிதனுடைய மனநிலை கீழ்த்தரமான செயல்காடுகளை நெறுங்கிப்போகின்றது. இந்நிலையில் ராஜா நீண்டு பழுத்த கொம்பை வைத்துக்கொள்ள பரிந்துரைக்கின்றார். என்ன வேடிக்கையான விஷயம். இன்னொன்று முந்தைய ராஜா வயது முதிர்ந்தவர் அவரின் இயல்புக்கு கொம்பை தன்னோடு வைத்துக்கொண்டது மிரியாதையாக இருந்தது. புதிய ராஜா மிகவும் இளமையானவர் அவரின் தோற்றத்திற்கு கொம்பை தன்னுடன்வைத்துக்கொண்டால், எதிரி நாட்டுக்காரன் நகைப்பதற்கு வசதியாக அமைந்துவிடும். ஆகவே ராஜா ஒருபோதும் அக்கொம்பைப் பயன்படுத்தக்கூடாது.

ஒரு வேளை நமது முன்னாள் ராஜா பயன்படுத்தியக் கொம்பு என்பதற்காக பாதுகாப்பான இடத்தில் வைத்து நினைவுச் சின்னமாக்கி பார்த்துக்கொண்டிருக்கலாம். சிறந்த கொம்பு என்பதற்காக அதனுள்ளிருந்து புறப்படும் மூலிகை கலந்த நறுமனம் காற்றில் கலந்து வெளியேறும்போது நம் எல்லாரின் ஆரோக்கியத்திற்கும் பயன்படுதலாக இருக்கும்“

பாதுகாப்பு அமைச்சரின் வாதங்கள் வெகுவாக சபையை ஈர்த்தது. மிகுந்த சத்தத்துடன் வரவேற்பைப் பெற்றது. புதிய ராஜாவும் பாதுகாப்பு அமைச்சரின் வாதத்தை வரவேற்றார்.

அரசபையின் சனி மூலையில் கொலுமண்டபம் இருந்தது. அம்மண்டபத்தின் இடப்பக்கம், வலப்பக்கம் என வட்ட வடிவிலான இருபெரும் தூண் இருந்தது. வலப்பக்கம் தூண் ஒட்டினார்போன்று கடந்த ராஜாவின்மார்பளவிலான உருவம் அமைத்திருந்தார்கள். அவ்வுருவம் வெங்கலத்தால் செய்யப்பட்டு தங்கமுலாம் பூசப்பட்டு மிகவும் நேர்த்தியாக இருந்தது. புதிய ராஜா ஏற்கனவே கொம்பைக் கழுவிய பணியாளனை தினந்தோறும் ராஜாவின் மார்பளவிலான உருவத்தை துடைத்து பாதுகாக்கம் பணியை கொடுத்திருந்தார். அப்பணியாளன் அதை மிகச்சரியாகச் செய்தான். முன்னாள் ராஜாவின் உருவம் பலபலப்பாகவே இருந்தது.அதன் அருகில் வருபவர்கள் நின்று வணங்கிச் செல்வார்கள்.

இடப்பக்கத் தூணை ஒட்டி, பிரித்தியேகமான கண்ணாடிக்கூண்டை செய்து அதற்குள் நீண்டு பழுத்த கொம்பை புதிய ராஜா வைத்தார். ஒரு தூணில் முந்தைய ராஜா, இன்னொருத்தூணில் கொம்பு இருப்பது மிகப்பொறுத்தமாக இருக்கிறது என்று புதிய ராஜாவை அரசபையும், குடிமக்களும் புகழ்ச்சியாகப் பேசிக்கொண்டார்கள். நீண்டு பழுத்த கொம்புக்கு நல்ல இடம் கிடைத்துவிட்டது என்றாலும், அதன் பிறகு அரசபையில் யாராலும் பேசப்படவே இல்லை. ராஜா வைத்திருந்தக் கொம்பு இப்போது கண்ணாடிக் கூண்டில்இருக்கிறது என்றளவில்தான் அக்கொம்பை நினைவு கூர்ந்தார்கள். அதற்குமேல் விஷேசமான பேச்சுக்கள் எதுவும் இல்லை. பல வருடங்கள் கடந்துவிட்டன. கண்ணாடி கூண்டுக்குள் இருந்து, அனைவரின் பார்வையில் பட்டாலும், யாருமே அதைப் பொருட்படுத்தவில்லை. அநேகமாக மறந்தேவிட்டார்கள் என்பதுதான் நிஜம்.தினந்தோறும் அரசபைக்குள், கொலுமண்டபத்தின் அருகில் வருவோரின் பார்வையில் கொம்பு இருந்தாலும்,ஏற்கனவே சபையின் ஒரே இடத்தில் இருக்கும் இருக்கை, டேபில், சுவர், சன்னல், திரைச்சீலைகள் போன்று அதுவும் ஒரு பொருளாகத்தான் பார்வையில் பட்டுபோகின்றது.

எப்போதும்போலத்தான் அன்றும் பணியாளன் ராஜாவின் உருவத்தைச் சுத்தப்படுத்திவிட்டு, பக்கத்தில் இருக்கும் கண்ணாடிக் கூண்டைப் பார்த்தான். ஒருவேளை கொம்பு வெளியில் இருந்தால் அதையும் துடைத்தெடுக்கலாம். கூண்டுக்குள் வைத்துவிட்டார்களே என்று சங்கடப்பட்டான். ராஜாவோடு இருந்த நாட்களையும் நினைத்துப்பார்த்தான். எத்தனை மந்திரிகள் அதைச் சுற்றிக்கொண்டே இருந்தார்கள். குடிமக்களால் எவ்வளவு புகழாரம். எல்லாரும் எங்கேப் போனார்கள். நினைக்க நினைக்க உண்மையிலேயே கொம்பை அருகில் சென்று பார்க்க பணியாளன் நெஞ்சு உந்துதல் ஆனது. கூண்டின் மிக அருகில் வந்து உற்றுப்பார்த்தான். அப்போதுதான் அந்த அதிசயத்தைக் கண்டான். நீண்டு பழுத்த கொம்பிற்கு புதிதாக ஒரு கால் முளைத்திருந்தது. அது ஏறக்குறைய ஒருவருஷக்குழந்தையின் உயரத்திற்கு வளர்ந்திருந்தது. கொம்பில் இருந்து வளர்ந்து தொங்கும் காலின் கீழ்பகுதி, காலின் கீழ்பகுதிபோன்று இல்லாதபடி இருந்தது. சரியகச் சொல்லவேண்டுமென்றால் பழுப்பும்,ரோசும் கலந்த முகச்சாயலைக் கொண்ட தலைப்பகுதியாய் இருந்தது. அதிலிருந்து மற்ற உடல் உறுப்புப் பகுதிகள் வளரும் சாத்தியம் தெரிந்துகொண்டிருந்தது. பணியாளனுக்கு சதோஷம் தாங்கமுடியவில்லை. உடனே தன் கண்ணில் பட்டவர்களிடம் சொன்னான்.

“முந்தைய ராஜா வைத்திருந்தக் கொம்பிற்கு புதிதாக ஒரு கால் முளைத்திருக்கிறது. அது கொம்பின் கால் பகுதிபோன்று இல்லாமல், தலைப்பகுதியின் தோற்றம் கொண்டுள்ளது“ என்றான்.

சில மந்திரிகள் வந்துபார்த்து ஆச்சரியப்பட்டார்கள். எந்த நபராலும் மேனியைத் தொட்டுப் பார்க்கமுடியவில்லை. செய்தி புதிய ராஜாவிற்குப் போனது. ராணியார் அவசர அவசரமாக கொம்பு இருக்கும் கூண்டை வந்துப் பார்த்தார்கள். ராணியாருக்கு சற்று குற்ற உணர்வுதான் இருந்தது. ‘உண்மையிலேயே இக்கொம்பிற்குள் ஏதோபிரித்தியேகமான பண்பு ஒளிந்திருக்கிறது. நாம் தான் இதை உதாசினப் படுத்திவிட்டோம்‘ என்று வருந்தினார்.

புதிய ராஜாவும் அவ்விடத்தில் கூடினார். கூட்டம் அதிகமாகிவிட்டது. கொம்பைப் பார்ப்பதற்கு குடிமக்களும்,வரத்தொடங்கினார்கள். ஏற்கனவே அதற்கு புகழ் இருந்தபோது கூடவே இருந்தவர்கள், இப்போது முதல் வரிசையில் நின்றார்கள். எபோதும்போல அதன் மூலிகை மகிமையை உணர்ந்தவர்களும், புதிதாக முளைத்த காலைப் பார்ப்பதற்காகவும் வந்தவர்களும் சாரை சாரையாய் வந்தார்கள். கூட்ட நெரிசலில் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடப்போகிறதென்று புதிய ராஜா எச்சரிக்கையானார். உடனே பாதுகாப்பு மந்திரியை அழைத்தனுப்பினார்.

காவல் திட்டங்களை பலப்படுத்தவும், மக்களை ஒழுங்குபடுத்தவும் வழிவகை செய்யும்படி உத்தரவிட்டார். இவ்வளவு சீக்கிரம் கொம்பின் கால் முளைப்புச் செய்தி பரவியதைக் கண்டு புதிய ராஜாவிற்கே ஆச்சரியமாக இருந்தது. முன்னாள் ராஜாதான் கொம்பிற்குள் வடிவெடுக்கிறார் என்றப் பேச்சு பரவலானது.

புதிய ராஜாவிற்கேக்கூட நாம் தவறு இயைத்துவிட்டோம் என்ற யோசனை பிறந்தது. அரசபையின் கூட்டத்தில்மந்திரிமார்கள் அதிகம்பேர் கொம்பின் சிறப்பைக் கூறியபோது நாம் அங்கீகரிக்காமல் போய்விட்டோமே. வருத்தப்பட்டார்.

புதிய ராஜா இவ்வளவு தூரம் வருத்தப்பட கொம்பின் கால் முளைப்பு நிகழ்வு, பெரிய அதிசயமாகதோன்றியிருப்பதால் மட்டுமல்ல. நாட்டின் மிக நம்பிக்கைக்குறிய வேத விற்பண்ணர்கள் “இக்கொம்புடன் ராஜாவின் இருப்பு என்பது, நாட்டின் மிகப்பெரியப் பாதுகாப்பு, அரசின் சுற்று வட்டப்பாதையில் விருதாவாகச்சுற்றும் நன்மைகளை அதன் மூலிகை ஈர்ப்பு சக்தியால் வசீகரம் செய்யக்கூடியது“ என அக் கொம்பைக்குறித்து சாட்சி சொன்னார்கள். அச்சாட்சிதான் ஏற்கனவே கலங்கியிருந்த புதிய ராஜாவின் மனதை மேலும் யோசிக்கவைத்தது. இருந்தாலும் புதிய ராஜா பதட்டமடையவில்லை.

கொம்பின் மேனி பிரகாசமாக இருந்தது. முந்தைய ராஜாவின் காலங்களில் ராஜாவின் கட்டளைகளாலேயே கொம்பிற்கு பல பெருமைகள் வந்து சேர்ந்தது. தற்போது தன்னுடைய சுய மகிமையினாலே, குவியும் அன்பும்,கவனிப்பும் தரும் உள்ளார்ந்த இன்பம் அலாதியானது. இந்நிகழ்வு வாய்ப்பது எளிதான காரியம் அல்ல. கொம்பு இத்தருணத்தை மாபெரும் கடவுள் சக்தியேக் கொடுத்துள்ளது என நம்பியது.

முந்தையக் காலங்களில் கொம்பு ராஜாவுடன் இருந்தபோது, ராஜாவின் கவனத்திற்கு வராத பல விஷயங்களை கொம்புதான் வெளிப்படுத்தியிருக்கிறது, அதனால், பல மந்திரிகள் பாதிக்கப்பட்டும் இருக்கிறார்கள். என்பது அரசபையின் ரகசியப்பேச்சுக்களில் ஒன்றாகவே இருந்தது. ஆனால், அவைகள் எதுவும் இப்போது ரகசியமாகக்கூட பேசிக்கொள்ளவில்லை. பலவிதமான சிந்தனை, மற்றும் செயல் கொண்ட மந்திரிமார்கள்,குடிமக்கள் கருத்துவேறுபாடின்றி இணைந்து கொம்பின் புதிய கால் முளைப்பு மகிமையைப் புகழ்ந்தார்கள். ஏறக்குறைய இரவு பகல் ஓய்வில்லாமல் கொம்பைக்காண கூட்டம் இருந்துகொண்டேயிருந்தது.

முந்தைய ராஜாவின் மார்பளவு உருவத்தைக்கூட மந்திரிமார்கள், குடிமக்கள் அநேகமாக பார்க்கவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். புதுவிதமான தோற்றம் மக்களை எப்போதும் ஈர்க்கிறது என்பதை பணியாளன் உணர்ந்தான். அவன், ராஜாவின் மார்பளவு உருவத்தைச் சுத்தப்படுத்திவிட்டு சற்றுத் தள்ளி நின்று கத்தினான்.

கணவான்களே, நீங்கள் தற்போது அதிகமாகப் பார்க்கின்ற கொம்பை வைத்திருந்த நம்முடைய ராஜா இங்கே இருக்கின்றார். இன்று மகிமையை வெளிக்காட்டுகின்ற கொம்பின் மகிமையை அன்றே அறிந்தவர். நம்முடைய ராஜாவும் கணம் பொருந்தியவர்தான் என்பதை மறந்துவிடக்கூடாது. அவரையும் தரிசித்துச்செல்வது உங்கள் கடமையல்லவா? என்று கூவினான். அதைக்கேட்டவர்கள் அப்போதுதான் நினைவு வந்தவர்களாக முந்தையராஜாவின் மார்பளவு உருவத்தை வந்து வணங்கிச்சென்றார்கள்.

மறுநாள் மக்களின் பார்வை நேரத்திற்கு முன் பணியாளன் முந்தைய ராஜாவின் மார்பளவு உருவத்தைத் துடைத்துவிட்டு, நீண்டு பழுத்தக்கொம்பில் இன்று ஏதாவது மகிமை வெளிப்பட்டிருக்கிறதா என்று மிக அருகில் சென்று பார்த்துக்கொண்டிருந்தான்.

கோழைக் கட்டிய சளி பணியாளன் முகத்தில் வந்து விழுந்தது.परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।


परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।


0001.gif

om2.gif
h.gifa.gifr.gifi.gifh.gifa.gifr.gifa.gifn.gifk.gif ( hari krishnamurthy K. HARIHARAN)"

” When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ”
"Keep away from people who try to belittle your ambitions. Small people always do that, but the really great ones make you feel that you too, can become great."- Mark Twain.

யாம் பெற்ற இன்பம்
பெருக வையகம்
visit my blog https://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
http://harikrishnamurthy.typepad.com
http://hariharan60.blogspot.in
http://facebook.com/krishnamurthy.hari

VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE

Advertisements

Published by

harikrishnamurthy

a happy go lucky person by nature,committed to serve others and remove their sufferings through all possible help. POSTS IN MY BLOG ARE MY OWN OPINION, COLLECTIONS OF INTERESTING ARTICLES FROM FROM VARIOUS SOURCES. MY ONLY AIM IS TO SHARE GOOD THINGS WITH OTHERS WHICH MAY BE USEFUL TO OTHERS AND NOT TO HURT ANY ONE'S FEELINGS. If you like my blog, like me,follow me, share with others, reblog If you have some suggestions post comments your suggestions and comments are eagerly awaited

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s