பத்மாவதி பரிணயம்


பத்மாவதி பரிணயம்

[இது போன வருடம் நவம்பரில் தட்டச்சு செய்யப்பட்டது
புதிய மெம்பர்களுக்காக ரீ-போஸ்ட்-வரகூரான் நாராயணன்.]

மரவக்காடு ராமஸ்வாமி அய்யருக்கு,நான்கு பெண்கள்,
இரண்டு ஆண் குழந்தைகள்.

இள வயதில் எதிலும் அக்கறை காட்டாமல் சுற்றித் திரிந்ததால்
மாத வருமானத்திற்கு உத்திரவாதம் இல்லை. வைதீகச் சடங்குகள்
செய்விக்கும் பண்டிதர்களுடன் உதவியாளனாகச் செல்வார்.அதில்
கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடந்து கொண்டிருந்தது.

பரம்பரையாக வந்த வீட்டில் வாசம், நல்ல வேளையாக வீட்டு
வாடகை பிரச்னை இல்லை.

கிராமத்துக்கு வெளியே, ஒரு தென்னந்தோப்பு,முப்பது
தென்னைகள்.’தாளுண்ட..நீரைத் தலையாலே தான் தருதலால்’
தினமும் ஒரு கால சாப்பாடு நிச்சயம்..

மகா பெரியவாளை நமஸ்கரித்து விட்டு எழுந்து நின்றார்.
ராமஸ்வாமி,முகத்தில் சோகம் அப்பியிருந்தது.

“பெரிய பெண்ணுக்கு இருபத்திரண்டு வயதாகிறது.அடுத்த
வளுக்கு இருபது. ரெண்டு பேருக்கும் ஒரே முகூர்த்தத்திலே
கல்யாணம் பண்ணினால் செலவு குறையும்.அது ஒத்து வரலே,
மூத்தவளுக்கு ஒரு வரன் நிச்சயமாகும் போல் இருந்தது…
பணம் தேவைப்பட்டது. தென்னந்தோப்பை கிரயம் பேசி,
அட்வான்ஸ் வாங்கி, அக்ரிமென்ட் போட்டேன்…”
தொண்டை அடைத்துக் கொண்டது:மென்று விழுங்கினார்.

“அண்ணாவுக்குக் கோபம். அவரைக் கேட்கலையாம்.
பரம்பரை சொத்து: அவருக்கும் உரிமை உண்டாம்.
கோர்ட்டுக்குப் போய் ஸ்டே வாங்கிட்டார்…”

பெரியவாள் ஐந்து நிமிஷம் அவரையே பார்த்துக்
கொண்டிருந்தார்கள்.பின்னர் பிரசாதம் கொடுத்து
அனுப்பி விட்டார்கள்.

ராமஸ்வாமிக்குப் படு ஏமாற்றம்.’கவலைப்படாதே’
என்று ஒரு குறிப்புக் கூட கொடுக்கவில்லையே.
பெரியவாள்.

வெளியே வந்ததும், பெரியவாளின் அணுக்கத் தொண்டர்
ராயவரம் பாலு கண்ணில் பட்டார். அவரிடம் தன் ஆதங்கத்தைக்
கொட்டித் தீர்த்தார் ராமஸ்வாமி.. [தொடரும்]

“பெரியவா மனசு வெச்சா என்ன வேணுமானாலும் பண்ணலாம்.
என் அண்ணாவுக்கு என்ன குறைச்சல்? பெரிய வீடு, எப்போ
பார்த்தாலும் வெளியூர்தான். நேரில் பார்க்கவே முடியறதில்லே.
அப்பா சிரார்த்தத்துக்குக் கூட என்னைக் கூப்பிடறதில்லே..
என்னால் தனியாகப் பண்ண முடியுமா? நான்..கஷ்டப்படறவன்,
உதவி செய்யப்படாதா?”

பாலு கேட்டார்; பெரியவாளிடம் சொல்லப்படாதா?”

“சொன்னேனே1 பெரியவா கேட்டுண்டே இருந்தா..விபூதி
பிரஸாதம் கொடுத்தா அவ்வளவுதான்!”

பாலுவுக்கும் புரியவில்லை. எல்லாருக்கும் ஆறுதல் கூறும்
பெரியவா,ராமஸ்வாமியை மட்டும் ஏன் ஒதுக்கி விட்டார்கள்”
ராமஸ்வாமி ஏழையே தவிர, ரொம்பவும் நல்லவர்;பக்திமான்;
அனுஷ்டாதா…பெரியவாளுக்குத் தெரியுமே”

“கவலைப்படாதே, பெரியவா மேலே பாரத்தைப் போட்டுட்டு
மேலே காரியத்தைப் பார்…வரட்டுமா”
—————————————————————————————————–

அரை அடி அகலத்துக்கு ஜரிகைக் கரை போட்ட தூய வேஷ்டி
அதற்கேற்ற அங்கவஸ்திரம்,கொட்டைப் பாக்கு அளவில்
தங்கப்பூண் கட்டிய ருத்ராட்சமாலை,நவரத்தினமாலை,
ஐந்து பவுன் சங்கிலியில், இரண்டு அங்குல டயா மீட்டரில்
ஒரு டாலர்;

பத்தினியும் இரண்டு சிஷ்யர்களும் உடன் வர, தட்டு நிறையப்
பழங்களுடன் கம்பீரமாக நடந்து வந்தார்.’உபன்யாஸ திலகம்
மார்க்கபந்து சாஸ்திரிகள்.

பெரியவாளிடம் அவருக்கு எப்போதும் ஒரு சலுகை உண்டு.
வெகு நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள்.சாயங்காலத்தில்
ஒரு மணி நேரம் உபன்யாசம் செய்யச் சொல்வார்கள்.

பெரியவாள், பௌராணிகர் வந்திருப்பதை ஓரக் கண்ணால்
பார்த்து விட்டார்கள்.ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல்
யார் யாருடனோ,என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

இன்றக்கு என்ன,இப்படி?

அகில பாரதத்திலும் புகழ் பெற்ற ஒருபௌராணிகரை இப்படிக்
காக்க வைக்கலாமா?

ராயவரம் பாலு,பெரியவாள் அருகில் சென்று,”மார்க்கபந்து
சாஸ்திரிகள் வந்திருக்கார்”என்று இரைந்து சொன்னார்.

பெரியவாள் பார்வை இவர் பக்கம் திரும்புகிற மாதிரி பட்டது.
பழத்தட்டை சமர்ப்பித்துவிட்டு,வந்தனம் செய்தார் சாஸ்திரிகள்.

“திருப்பதிக்குப் போயிண்டிருக்கேன்.ரொம்ப அபூர்வமா,
ஏழெட்டு நாள் ரெஸ்ட்.புரோகிராம் இல்லே.ஸ்ரீனிவாசனுக்கு
திருக்கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்னு, பத்தினி
ஆசைப்பட்டா, உடனே புறப்பட்டுட்டேன். பெரியவா
அனுக்ரஹத்தோட ஸ்ரீனிவாச கல்யாணம் நடக்கணும்…”

பெரியவாள் அவரை ஏறிட்டுப் பார்க்கவில்லை; முகம்
கொடுத்துப் பேசவில்லை.தரிசனத்துக்கு வந்த பாட்டிகள்
குடியானவர்களிடமெல்லாம் உற்சாகமாகப் பேசினார்கள்.

அரை மணி ஆயிற்று.

“சாஸ்திரிகள் நின்னுண்டுருக்கா…” என்று நினையூட்டினார் பாலு.

“ஹி……ஹி……ஆமாம்……பெரியவா அனுக்ரஹம் பண்ணனும்.
ஸ்ரீநிவாஸ திருக்கல்யாணம்…..”அவர் வாக்கியத்தை முடிக்கு முன்
சட்டென்று எழுந்தார்கள் பெரியவாள்.

“முதல்லே பத்மாவதி பரிணயம் பண்ணுங்கோ….”

உள்ளே போய் விட்டார்கள்,பெரியவாள்.எல்லாருக்கும்
ஆச்சர்யமாக இருந்தது.

ஸ்ரீநிவாஸ கல்யாணம் என்றால்,அது பத்மாவதி கல்யாணமும்
தானே? யார் போய் பெரியவாளிடம் விளக்கம் கேட்பது?
திருப்பதியில் நிறையப் பேர்கள், கல்யாணம் உற்சவம்
செய்கிறார்கள்.நீ, திருச்சானூரில் பத்மாவதி கல்யாணம்
உற்சவம் செய்’ என்கிறார்களா?

“பெரியவா என்ன உத்தரவு போட்டுட்டுப் போயிருக்கா?”

சாஸ்திரிகள் முகத்தில் ஒரு லிட்டர் அசடு வழிந்தது.

முதுகில் சுளீரென்று சாட்டையடி!

இரண்டு மாதங்கள் கழித்து, முகமெல்லாம் பூரித்துக் கிடக்க,
கல்யாணப் பத்திரிகையைப் பெரியவாளிடம் சமர்ப்பித்து
விட்டு ராமஸ்வாமி,சொன்னார்.

“கல்யாணச் செலவு முழுக்க அண்ணாவே ஏத்துண்டுட்டார்.
‘கன்னிகாதானம் பண்ணிக் கொடுக்கிறது மட்டும்தான் உன்
பொறுப்பு. மீதி எல்லாத்தையும் எங்கிட்ட விட்டுடு’ன்னார்.”

“தென்னந்தோப்பு கேஸை வாபஸ் வாங்கிண்டுட்டார்.

“சின்ன பையனுக்குப் பன்னிரண்டு வயது. பூணூல் போட்டு
தன் சிஷ்யனா வைத்துக் கொள்வதாகச் சொல்லிட்டார்.”

“அண்ணா,இப்படி அனுகூலமா மாறுவார்னு நான் கனவு
கூட கண்டதில்லே….”

பெரியவாள் வலக் கரத்தைத் தூக்கி ஆசிர்வதித்து
பிரசாதம் கொடுத்தனுப்பினார்கள்.

வெளியே வந்தார் ராமஸ்வாமி.எதிரே ராயவரம் பாலு!

“என்ன மரவக்காடு! கல்யாணப் பத்திரிகையா?புத்திரிக்குக்
கல்யாணமா?கையிலே காலணா இல்லேன்னு கண்ணீர் விட்டீரே?”

பத்திரிகையைப் பிரித்துப் பார்த்தார் பாலு.

“…மரவக்காடு ஜகதீஸ்வர சாஸ்திரிகள் பௌத்ரியும் என்
இளைய சகோதரன் சிர.ராமஸ்வாமியின் ஸீமந்த புத்திரியுமான
சௌ.பத்மாவதியை..” விதேயன்;மார்க்கபந்து சாஸ்திரி…

பாலுவின் கால்கள் தரையில் வேர்விட்டன.

“பாலு அண்ணா! அவசியம் கல்யாணத்துக்கு வந்துடணும்…
அண்ணா பொறுப்பிலே நடக்கிறது…உங்களைப் பார்த்தால்,
அண்ணா சந்தோஷப்படுவார்…”

தலையை அசைத்துவிட்டு,நகர்ந்தார் பாலு.

இரண்டு மாதங்கள் முன்னர்,பெரியவாள் சொன்ன சொற்கள்
காதருகில் மீண்டும் ஒலித்தன.

‘முதல்லே பத்மாவதி பரிணயம் பண்ணுங்கோ…”

“எந்த பத்மாவதி” திருச்சானூர் பத்மாவதியா?
மரவக்காடு பத்மாவதியா?

ராமஸ்வாமியினுடைய பெண்ணின் பெயர் ‘பத்மாவதி’
என்று பெரியவாளுக்கு யார் சொல்லியிருப்பார்கள்?.

தேவ ரகசியங்களில் தலையிட நமக்குத் தகுதியில்லை.
மரவக்காடு பத்மாவதி கல்யாணத் தேதியை நினைவு
வைத்துக் கொண்டால் போதும்.!

திருச்சானூர் பத்மாவதிக்கு நித்ய கல்யாணம்.!

சங்கரா! போற்றி…போற்றி.

Published by

harikrishnamurthy

a happy go lucky person by nature,committed to serve others and remove their sufferings through all possible help. POSTS IN MY BLOG ARE MY OWN OPINION, COLLECTIONS OF INTERESTING ARTICLES FROM FROM VARIOUS SOURCES. MY ONLY AIM IS TO SHARE GOOD THINGS WITH OTHERS WHICH MAY BE USEFUL TO OTHERS AND NOT TO HURT ANY ONE'S FEELINGS. If you like my blog, like me,follow me, share with others, reblog If you have some suggestions post comments your suggestions and comments are eagerly awaited

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s